சென்னை: தமிழ்நாட்டில் இப்போது நடக்கும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிடத் தடை இல்லை என்று நேற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இப்போதைய தேர்தல் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளுக்குத் தனித்தனியாக நடத்தப்படுவதால் அது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று சட்டப் பஞ்சாயத்து இயக்கம் என்ற ஓர் அமைப்பு வழக்குத் தொடுத்து இருந்தது.
நகர்ப்புற அமைப்புகளுக்குத் தேர்தல் நடந்து முடியும்வரை ஊரக உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என்று அந்த இயக்கம் தன்னுடைய மனுவில் தெரிவித்து இருந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது.
இதனிடையே, ஊரக, உள்ளாட்சிப் பகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று 158 ஒன்றியங்களில் விறுவிறுப்பாக நடந்தது. மொத்தம் 46,639 பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க மக்கள் காலையிலிருந்தே 25,008 வாக்குச் சாவடிகளில் வாக்களித்தனர்.
மொத்த வாக்காளர்கள் ஒரு கோடியே 28 லட்சம் பேர் என்று அறிவிக்கப்பட்டது. 61,000 போலிசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி சுமார் 61 விழுக்காட்டினர் வாக்களித்து இருந்தனர்.
1,550 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. பல வாக்குச்சாவடிகளில் பலவகை விநோதங்களும் சட்ட விரோத காரியங்களும் அரங்கேற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.
பதிவான வாக்குகள் ஜனவரி 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அதுவரையில் வாக்குப் பெட்டிகள் மிகவும் பாதுகாப்பான இடங்களில் பத்திரப்படுத்தப்பட்டு, 24 மணி நேரம் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.