சென்னை: சென்னை திருவள்ளூர் அருகே ஆட்டோ ஒன்றில் 29 வயதுப் பெண்ணைக் கடத்திச் செல்ல முயன்றவர்களைத் தடுத்து அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
செம்பரம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்த அந்தப் பெண், வழியில் ஒரு ஆட்டோ வந்ததைக் கண்டு அதை நிறுத்தினார்.
அதில் இரண்டு இளைஞர்கள் இருந்தனர். பலர் சேர்ந்து செல்லக்கூடிய ஆட்டோ என்பதால் அதில் அந்தப் பெண்ணும் ஏறிக்கொண்டார்.
ஆனால் அந்த ஆட்டோ வழி மாறிச் சென்றதைக்கண்டு திடுக்கிட்ட அந்தப் பெண், ஆட்டோ ஓட்டுநரை விசாரித்தபோது ஆட்டோவில் இருந்தவர்கள் பெண்ணை மிரட்டியதாகத் தெரிகிறது.
அவர் உதவிக்காக கூச்சலிட்டதைப் பார்த்த ஐந்து இளைஞர்கள் அந்த ஆட்டோவை விரட்டினர். சிறிது நேரம் சென்றதும் ஆட்டோவிலிருந்து கீழே குதித்து அந்தப் பெண் காயத்துடன் தப்பிவிட்டார். அவரை மூன்று இளைஞர்கள் பத்திரமாக வீட்டுக்குக் கொண்டு சென்றனர்.
இந்நிலையில், உதவிக்கு வந்த இளைஞர்களில் இதர இரண்டு பேரை அந்த ஆட்டோ மோதித் தள்ளியது. அதனால் படுகாயம் அடைந்த யாகேஷ் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்துவிட்டார். ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேரும் தப்பிவிட்டனர். அவர்களை போலிஸ் தேடி வருகிறது.