ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புக்கிடையே நேற்று காலை தொடங்கியது.
தொடக்கத்திலிருந்தே அதிமுகவும், திமுகவும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன.
நேற்று இந்திய நேரப்படி மாலை ஆறு மணியளவில் வெளியான முன்னிலை நிலவரப்படி, மொத்தமுள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 122 இடங்களிலும் திமுக 143 இடங்களிலும் முன்னிலை வகித்தன.
அதேபோல் மொத்தமுள்ள 5,067 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 551 இடங்களிலும் திமுக 713 இடங்களிலும் முன்னிலை வகித்தன. மற்றவர்கள் 47 இடங்களில் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கிராம உள்ளாட்சி தலைவர், கிராம உள்ளாட்சி உறுப்பினர், ஒன்றிய உள்ளாட்சி வார்டு உறுப்பினர், மாவட்ட உள்ளாட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மக்கள் வாக்களித்தனர்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய பத்து மாவட்டங்களைத் தவிர எஞ்சிய 27 மாவட்டங்களில் தேர்தல் நடந்தது.
இந்த 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 91,975 பதவி இடங்கள் உள்ளன.
இவற்றில் 18,850 இடங்களுக்குப் போட்டியின்றி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில் மீதமுள்ள 73,405 பதவிகளுக்கு வாக்களிப்பு நடந்தது.
முதல் கட்ட வாக்குப் பதிவில் 76.19 விழுக்காட்டு வாக்குகளும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 61.45 விழுக்காட்டு வாக்குகளும் பதிவாகியிருந்தன.
இந்நிலையில், நேற்று வாக்குகளை எண்ணும் பணியில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தப் பணிகளைத் தொடங்குவதற்குத் தாமதம் ஏற்பட்டது. சில இடங்களில் அதிகாரிகளுக்கும், முகவர்களுக்கும் மோதல் ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது. நேற்று நள்ளிரவு வரை வாக்கு எண்ணும் பணி நீடிக்கும் என்று கூறப்பட்டது.