சென்னை: தமிழ்நாட்டில் ஜனவரி 1 புத்தாண்டுக் கொண்டாட்ட நாளன்று நிகழ்ந்த சோக சம்பவங்களில் மொத்தம் 14 பேர் பலியாகிவிட்டனர்.
சென்னையில் மட்டும் 318 பேர் காயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தலைநகர் சென்னையிலும் மதுரை உள்ளிட்ட இதர முக்கிய இடங்களிலும் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
ஏராளமான மருத்துவ வாகனங்கள் குவிக்கப்பட்டு இருந்தன. இருந்தாலும் சென்னையில் மட்டும் 318 பேர் பலவித சம்பவங்களில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
காவலில் இருந்த போலிஸ்காரர்கள் மீது வாகனங்கள் மோதியதால் அவர்களில் பலரும் காயம் அடைந்தனர் என்றும் தெரியவந்தது. சென்ற ஆண்டைவிட (304) இந்த ஆண்டில் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, மாநிலம் முழுவதும் நிகழ்ந்த சாலை விபத்துகளில் மொத்தம் 14 பேர் மாண்டதாகவும் சென்னையில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 5 என்றும் அதிகாரிகள் கூறினர்.
மாநிலத்தில் சாலைகளில் பல இடங்களிலும் இரு சக்கரவாகனம், பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் பலியான இவர்கள், மாநிலத்தின் பல பகுதிகளையும் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் புத்தாண்டு நாளன்று பல இடங்களிலும் நிகழ்ந்த விபத்துகளில் அண்ணன், தம்பி உட்பட ஆறு பேர் மாண்டதாக போலிஸ் கூறியது.
போதை, மூர்க்கத்தனம், அளவுக்கு அதிக வேகம், தூக்கக் கலக்கம் முதலானவை விபத்துகளுக்கு முக்கிய காரணங்கள் என்று போலிசார் குறிப்பிட்டனர்.