கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றியை மாற்றி அறிவித்ததாகக் கூறி ஜோதிமணி எம்பியும் செந்தில் பாலாஜி எம்எல்ஏவும் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
க.பரமத்தி ஒன்றியத்தின் கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் கலையரசி, திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் லோகநாயகி ஆகி யோர் போட்டியிட்டனர்.
அங்கு காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றதாகக் கூறப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் கலையரசி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்த னர். இதேபோல் 2வது வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றதாக தகவல் வெளியானது. ஆனால் அதிமுக வேட்பாளர் சரவணன் வெற்றிபெற்றதாக நள்ளிரவில் தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.
இதுபற்றி அறிந்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு வந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
செந்தில் பாலாஜி கூறுகையில், “காங்கிரஸ் வேட்பாளர் லோகநாயகியின் வெற்றியை அறிவிக்கும்வரை எங்களது இந்தப் போராட்டம் தொடரும்,” என்றார்.