சென்னை: முன்னாள் சபாநாய கரும் அதிமுகவின் மூத்த தலைவருமான பி.எச். பாண்டியன் நேற்று உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 75.
நெல்லை மாவட்டம், சேரன் மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் பிறந்தவர் பி.எச். பாண்டியன், தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சியின்போது அதிமுகவில் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவராக இருந்தவர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி சட்டப்பேரவை தொகுதி இருந்தபோது 1977, 1980, 1984, 1989ஆம் ஆண்டு களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக 4 முறை அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்றிருந்தார்.
1999ஆம் ஆண்டு திருநெல் வேலி மக்களவைத் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எம்ஜிஆருக்குப் பிறகு அதி முகவில் பிளவு ஏற்பட்டபோது ஜானகி அணியில் பி.எச்.பாண்டியன் இருந்தார்.
போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து சசிகலாவை ஜெய லலிதா வெளியேற்றிய காலகட்டத்தில் தென்காசியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பி.எச்.பாண்டியன் பேசியபோது, “அதிமுக தற்போது தூய்மை அடைந்திருப்பதாகவும் கட்சியில் உண்மை தொண்டர்களுக்கு இனி நல்ல காலம்,” எனவும் கூறியிருந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். இதைத்தொடர்ந்து அதிமுகவில் அமைப்புச் செயலாளராகவும் பதவியில் இருந்தார். இவரது மகன் மனோஜ் பாண்டியன் தற்போது அதிமுகவில் இருக்கிறார்.