சென்னை: தமிழ்நாட்டில் உணவுக் கலப்படம் அதிகரித்து வருவதாக அபாயச் சங்கு ஊதப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் உணவுக் கலப்படம் பற்றி புகார் ஏதேனும் வந்தால் 24 மணி நேரத்தில் அதற்குத் தீர்வுகாணப்படுவதாக அதிகாரிகள் உறுதிபட தெரிவித்து இருக்கிறார்கள்.
மாநிலத்தில் உணவுக் கலப்படத்தையும் கலப்பு உணவையும் துடைத்தொழிக்க தாங்கள் தீவிர முயற்சிகளை முடுக்கிவிட்டு உள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மாநிலத்தில் உணவுக் கலப்படம் மற்றும் கலப்பு உணவு விற்பனை தொடர்பாக 9444042322 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று 2017ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி தமிழக அரசாங்கம் ஒரு திட்டத்தைத் தொடங்கியது.
அந்தத் திட்டம் மிகவும் வெற்றிகரமான திட்டமாக இருக்கிறது என்று இப்போது அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அந்த வாட்ஸ்அப் எண் மூலம் 2017ஆம் ஆண்டில் 1,227 புகார்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை 2018ல் 5,345 ஆகக் கூடியது. சென்ற ஆண்டில் 5,109 புகார்கள் தாக்கலானதாகவும் மூன்றாண்டுகளில் மொத்தம் 11,681 புகார்கள் அதிகாரிகளுக்கு வந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
உடல்நலத்துக்கு கெடுதல் பயக்கும் உணவுகள், கெட்டுப்போன இறைச்சி, மீன், கலப்படம் செய்யப்பட்ட நெய், தேயிலைத்தூள், போதைப்பொருட்கள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு வகை புகார்களையும் அதிகாரிகள் கையாண்டு இருக்கிறார்கள்.
இது பற்றி கருத்து கூறிய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி, இந்த வாட்ஸ்அப் எண் மூலம் பெறப்படும் புகார்கள் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்பப்படும் என்றும் அவர்கள் உடனே சோதனை களை மேற்கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.
சோதனைகளில் கலப்படம் ஏதேனும் தெரியவந்தால் மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். கலப்படம் உறுதி செய்யப்பட்டால் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் விளக்கினார்.
மொத்தத்தில் அரசாங்கம் தொடங்கி உள்ள வாட்ஸ்அப் திட்டம் மாநிலத்தில் கலப்பு உணவைத் துடைத்தொழிக்க மிகவும் உதவுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர்.