சென்னை: தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த ஊரக, உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி அறவே வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டது.
என்றாலும் அந்தக் கட்சியின் தலைவரான சீமான், மனம் தளரவில்லை என்றே தெரிகிறது.
தமிழ்நாட்டில் 2021ல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான வேட்பாளர்களை இந்த மாத முடிவில் தான் அறிவிக்கப் போவதாக சீமான் சனிக்கிழமை சென்னையில் தெரிவித்தார்.
முன்னதாகவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டால் அவர்கள் தொகுதி மக்களைச் சந்தித்து வாக்கு வேட்டையை இப்போதே தொடங்குவர் என்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறினார்.
சென்னையில் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான், அதற்கு முன்னதாக இவ்வாறு தெரிவித்தார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் 117 பெண்களையும் 117 ஆண்களையும் நிறுத்தப்போவதாக குறிப்பிட்ட அவர், இதன்மூலம் இரு தரப்பினருக்கும் சரிசம முக்கியத்துவத்தை தனது கட்சி அளிக்கும் என்றார்.
அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் தன்னுடைய கட்சிக்கு ஒரு பின்னடைவு அல்ல என்று கூறிய சீமான், சென்ற ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் உள்ளாட்சித் தேர்தலை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தன் கட்சி அதிக வாக்குகளைப் பெற்று சாதித்து இருப்பதாகக் கூறினார்.