பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஒதியத்தில் உள்ள பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலை பிரிவில் சாலையோரம் முத்திரையிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் கிடந்தன.
இதுகுறித்து வேப்பூர் ஊராட்சி ஒன்றிய தேர்தல் அலுவலர் வெங்கடேஷ்வரன் விசாரணை நடத்தினார்.
அப்போது, வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதுவேட்டக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டுகள் என்றும் வேட்பாளர் ஆறுமுகம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த கை உருளை சின்னத்தில் முத்திரையிடப்பட்ட 119 வாக்குச்சீட்டுகள் என்றும் தெரியவந்தது.
இதையறிந்த புதுவேட்டக்குடி ஊராட்சி மன்றத் தலைவருக்காக கை உருளை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த ஆறுமுகம் தனது ஆதரவாளர்களுடன் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்று வெங்கடேஷ்வரனிடம் தனக்குப் பதிவான 119 வாக்குச்சீட்டுகள் சாலையோரத்தில் கிடந்ததால் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மனு கொடுத்துச் சென்றார். அதேபோல் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த காமராஜ், சாந்தி ஆகியோரும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர்.