மதுரை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒருவர் தன்னை தேர்தலில் தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து சுவரொட்டி ஒட்டியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்குட்பட்டது சேடபட்டி ஊராட்சி ஒன்றியம். இங்குள்ள கேத்துவார்பட்டி ஊராட்சியில் 2வது ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு முருகேசன், பவுன்தாய், தங்கப்பாண்டி என மூன்று பேர் போட்டியிட்டனர்.
இதில், 39 வாக்குகள் பெற்று தங்கப்பாண்டி வெற்றி பெற்றார். முருகேசன் 7 வாக்குகளும் பவுன்தாய் 22 வாக்குகளும் பெற்றனர்.
இந்நிலையில், கட்டில் சின்னத்தில் போட்டியிட்டு 7 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்த முருகேசன் என்பவர் தன்னைத் தோற்கடித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து சுவரொட்டி ஒட்டியுள்ளார்.
அதில், "என்னை தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி. நீங்க இப்படி செய்வீங்கனு நான் கனவுல கூட எதிர்பார்க்கல..." என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த சுவரொட்டி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால்கூட முருகேசன் இவ்வளவு பிரபலமாகியிருப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் இந்த சுவரொட்டி மூலம் நன்கு பிரபலமாகிவிட்டார்.