மதுரை: பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரரை மிரட்டி 170 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.
மதுரை கூடல்புதூர் அருகே அப்பாவு முதல் தெருவில் வசித்து வருகிறார் சாலை ஒப்பந்ததாரர் குணசேகரன். இவர் தனது மனைவியுடன் வீட்டிலிருந்தபோது டிசம்பர் 27ஆம் தேதி ஐந்து பேர் வந்துள்ளனர்.
தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும் காவல்துறையினர் என்றும் அறிமுகப்படுத்தியுள்ளனர். ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுவருவதால் வாக்காளர்களுக்கு வழங்க பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய வீட்டை சோதனையிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பின்னர் வீட்டிற்குள் சென்ற கொள்ளையர்கள், துப்பாக்கியைக் காட்டி குணசேகரனையும் அவரது மனைவியையும் மிரட்டியுள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டிலிருந்த 170 பவுன் தங்க நகை, 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம், 20 ஆயிரம் மதிப்பிலான பத்திரங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண் டனர். மேலும் தங்களுக்கு ரூ.30 லட்சம் ரூபாய் உடனே தரவேண்டும் என்று கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள்.
அதற்கு குணசேகரன் குடும்பத்தினர் வங்கியில் ரூ.6 லட்சம் இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, குணசேகரன் குடும்பத்தினரைக் காரில் ஏற்றிக்கொண்டு ஒத்தக்கடையில் உள்ள வங்கிக்குச் சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது அன்றைய தினம் தேர்தலையொட்டி வங்கிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதனால் ஏமாற்றம் அடைந்து குணசேகரன் குடும்பத்தினரை காரில் இருந்து இறக்கிவிட்ட அந்த கும்பல், "நாங்கள் கேட்ட பணத்தை முழுவதும் கொடுக்க வேண்டும்.
"இதுகுறித்து வெளியில் எதுவும் சொல்லக்கூடாது. அப்படிக் கூறினால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவோம்," என மீண்டும் மிரட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து குணசேகரன் அளித்த புகாரின் அடிப்படையில் கூடல்புதூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.