சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சியில் காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் ஊராட்சித் தலைவருமான ப.சிதம்பரம் ஆதரவாளர் மாங்
குடியைச் சேர்ந்த தேவியும் கல்லூரி தாளாளர் அய்யப்பன் மனைவி பிரியதர்ஷினியும் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தேவி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி சான்றளித்த போது, அங்கு வந்த பிரியதர்ஷினி வாக்குவாதம் செய்து சான்றிதழைப் பிடுங்க முயற்சித்தார்.
தொடர்ந்து கூச்சல் போட்டு அந்த இடத்தைவிட்டுச் செல்லாமல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக புகார் தெரிவித்தார்.
தேவி சான்றிதழுடன் வீட்டுக்குச் சென்ற நிலையில், நள்ளிரவுக்கு மேல், மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர்.
நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல் எதிர்தரப்பினர் இல்லாமலே மறுவாக்கு எண்ணிக்கையைத் துவக்கிய அதிகாரிகள் அதிகாலை 5.30 மணிக்கு பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றளித்தனர்.
ஒரே ஊராட்சிக்கு இருவர் வெற்றி பெற்றதாக அறிவித்ததால் தேவி, மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு தேர்தல் ஆணையர், பிரியதர்ஷினி ஆகியோர் இதுதொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதோடு பிரியதர்ஷினி பதவியேற்க இடைக்காலத் தடையும் விதித்தார்.