மதுரை: பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த 13 மாவட்டங்கள் முன்வந்துள்ளதாகவும் இப்போட்டியில் பங்கேற்க ஏராளமான காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பொங்கலை ஒட்டி நடைபெறுவது வழக்கம். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஆயத்தப்
பணிகள் தொடங்கிவிட்டன.
ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்திலும் 16ஆம் தேதி பாலமேடு பகுதியிலும் 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.
இந்த ஆண்டும் போட்டிகள் சிறப்பாக நடைபெற வாடிவாசல் பகுதியில் வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்றன. ஜல்லிக்கட்டு மைதானம் தூர்வாரும் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, பார்வையாளர்களுக்கான பகுதி அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த இதுவரை 13 மாவட்டங்கள் பதிவு செய்துள்ளதாகவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க சுமார் 750 காளைகள் வரை பதிவு பெற்றுள்ளன என்றும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது பாதிப்பு ஏற்படும் கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பி சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் குறித்து ஆர்டிஓ தலைமையில் வாடிப்பட்டியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் காளைகளின் உத்தேசப் பட்டியல், வீரர்கள், காளைகள் முன்பதிவு டோக்கன் வழங்குவது, பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.