சென்னை சூளைமேடு புதிய மேற்கு தெருவைச் சேர்ந்தவர் 35 வயதான லீமா ரோஸ். அவரது கணவர் ஜேம்ஸ்.
வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் மளிகைப்பொருள்கள் வாங்குவதற்காக திருமதி லீமா நேற்று வெளியில் சென்றார்.
ஆண்டவர் தெரு ஜங்ஷன் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) பெட்டியில் கம்பிவடங்கள் திடீரென வெடித்துச் சிதறின.
அந்த கம்பிவடங்கள் தீப்பற்றி எரிந்ததில், தீப்பொறிகள் வெளியே சிதறி அந்த தெரு முழுவதும் தீப்பொறிகள் பரவின.
அந்த சமயத்தில் அந்தப் பக்கமாக வந்த லீமா ரோஸ் மீது சில தீப்பொறிகள் விழுந்தன. அதனால் லீமாவின் நைலான் நைட்டி உடையில் தீப்பற்றியது. மடமடவென பற்றிய தீ வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனால், எரிச்சல் தாங்க முடியாமல் கதறிய லீமாவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து தண்ணீரை அவர் மீது ஊற்றினர்.
மேலும் தெருவில் கிடந்த மண்ணை வாரி இறைத்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் லீமாவின் உடலில் சுமார் 80% கருகிவிட்டது.
உடனடியாக அவரை, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால், சற்று நேரத்திலேயே லீமாவின் உயிர் பிரிந்தது.
இது குறித்து சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity