சென்னை: சென்னை சூளைமேட்டில் தெருவோரம் இருந்த மின் இணைப்புப் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அறியாத பெண் ஒருவர் அந்தப் பக்கமாக நடந்து சென்றபோது, மின்பெட்டி வெடித்து அதில் இருந்து தீப்பிழம்பு சிதறியதில் கடுமையாக காயம் அடைந்து உயிரிழந்தார்.
இந்தப் பெண் தீப்பிடித்து பலியானதால் இப்போது அவரது மகன் அனாதையாகி உள்ளார்.
சென்னை சூளைமேடு, அவ்வை நகரைச் சோ்ந்தவா் லீமா ரோஸ், 35. இவா் நேற்று முன்தினம் புது மேற்குத் தெருவில் உள்ள மளிகை கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.
அப்போது தெருவோரத்தில் இருந்த மின் இணைப்பு பெட்டிக்கு கீழிருந்த மின் கடத்திகளில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் சற்று நேரத்தில் வெடித்துச் சிதறிய மின்பெட்டியின் நெருப்பு அவ்வழியாகச் சென்ற லீமா ரோஸ் மீது தெறிக்க, அவா் அணிந்திருந்த ‘நைட்டி’ மீது தீப்பற்றியுள்ளது.
லீமா ரோஸ் அலறி துடிப்பதை அறிந்து ஓடிவந்த அப்பகுதி மக்கள் தீயை அணைத்தனா். இருப்பினும் கடும் தீக்காயம் காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த லீமா ரோஸ் உயிரிழந்தாா்.
இதையடுத்து, மின் இணைப்புப் பெட்டியை மின்வாரிய ஊழியா்கள் சரிசெய்தனா். போலிசாரின் விசாரணையும் தொடர்கிறது.
உயிரிழந்த பெண் லீமா ரோஸ் தூத்துக்குடியை பூா்வீகமாக கொண்டவா். சென்னை அரும் பாக்கத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். கணவரால் கைவிடப்பட்ட லீமா ரோஸ், தனது மனநலம் குன்றிய மகனை தன்னுடன் பராமரித்து வந்தாா். இவரது மரணத்தை யடுத்து மனநலம் குன்றிய மகனை அவனது உறவினா்களிடம் ஒப்படைப்பதா? காப்பகத்தில் சோ்ப்பதா? என போலிசார் ஆலோசித்து வருகின்றனா்.