ராயபுரம்: 10க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசப் படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய ஆடவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 12 வயது சிறுமி பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இன்ஸ்டகிராமை தொடர்ந்து பயன்படுத்தும் அச்சிறுமிக்கு வாலிபர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. அச்சிறுமி பல்வேறு உடைகள் அணிந்து அவ்வப்போது பதிவேற்றம் செய்யும் படங்களைப் புகழ்ந்த வாலிபர், கொஞ்சம் கொஞ்சமாக சிறுமியுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு கைபேசி எண்ணை வாங்கிவிட்டார்.
ஆடையில்லாமல் உள்ள படங்களை அனுப்பும்படி அந்த வாலிபர் கேட்டதும் உடனே அதுபோன்ற பல படங்களை வாலிபரின் கைபேசிக்கு அனுப்பிவிட்டார் சிறுமி. ஒரு கட்டத்தில் வாலிபரின் சுயரூபம் தெரிந்த சிறுமி அவருடன் பேசுவதை தவிர்த்தார்.
இதற்கிடையே, சிறுமியின் தாயாருடன் கைபேசியில் தொடர்புகொண்ட மர்ம நபர், “உங்கள் மகளின் ஆபாசப் படங்கள் என்னிடம் உள்ளன. அவற்றைக் கொடுக்க ரூ.2 லட்சம் பணம் வேண்டும்,” என்று மிரட்டல் விடுத்தார்.
பணத்தைக் கொடுக்கவில்லை எனில் சிறுமியின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக அவர் தெரிவித்தார். இதனால் பயந்துபோன சிறுமியும் அவரது தாயும் வண்ணாரப்பேட்டை போலிசில் புகார் செய்தனர்.
மர்ம நபரை பொறி வைத்துப்பிடிக்க திட்டமிட்ட பெண் போலிசார் தனிப்படை அமைத்தனர். வாலிபரைத் தொடர்புகொண்ட பெண் போலிஸ் படை சிறுமியின் உறவினர் போல் பேச்சு கொடுத்தது. நம்பிய அந்த வாலிபர் பணத்துடன் பேசின்பிரிட்ஜ் அருகே வருமாறு தெரிவித்தார். மாறு வேடத்தில் அங்கு தயாராக இருந்த பெண் போலிசார் வாலிபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர், திருமுல்லைவாயிலைச் சேர்ந்த பி.டெக். பொறியியல் பட்டதாரியான சாய் என்கிற ராஜேஷ் சிவசுந்தரம் என்பது தெரிந்தது.
அவர் பயன்படுத்திய கைபேசி, மடிக்கணினி போன்றவற்றைச் சோதனை செய்தபோது 10க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களின் நிர்வாணப் படங்கள் அவற்றில் இருந்தன.
இன்ஸ்டகிராமில் பெண்களுடன் பழகும் சாய், அவர்களுக்கு காதல் வலைவீசி ஆபாசப்படங்களை அனுப்பச் சொல்லி ரசிப்பார். பின்னர் வேறொருவர் பேசுவது போல் பெண்களின் பெற்றோரை தொடர்புகொண்டு மிரட்டி பணம் பறிப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.