மேட்டுப்பாளையம்: பஞ்சாயத்துத் தலைவர் நினைத்தால் உலக நாடுகளையும் தங்களது கிராமத்தை நோக்கித் திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்கியவர் ஓடந்துறை சண்முகம்.
மேட்டுப்பாளையம் தாலுகாவைச் சேர்ந்த ஓடந்துறை ஊராட்சிமன்றத்தின் தலைவராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சண்முகம் மற்றும் அவரின் மனைவி லிங்கம்மாள் ஆகியோர் இருந்து வந்தனர். அவர்களது பதவிக்காலத்தில் காற்றாலை மூலம் ஆண்டுக்கு 8 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஊர் மக்களின் தேவைக்குப் போக மீதம் உள்ள மின்சாரம் தமிழக அரசின் மின்வாரியத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 850 பசுமை வீடுகளைக் கட்டித்தந்து ஓடந்துறையை குடிசைகள் இல்லாத கிராமமாக மாற்றினார் சண்முகம்.
நாட்டிலேயே முதன்முறையாக ராஜீவ் தேசிய குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது இந்த ஊராட்சியில்தான். இப்படி ஓடந்துறையை வசதி நிறைந்த கிராமமாக மாற்றிதற்காக சண்முகத்துக்குப் பல்வேறு விருதுகள் கிடைத்தன.
இருப்பினும், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓடந்துறை ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் தங்கவேல் வென்றார். 57 வாக்குகள் வித்தியாசத்தில் சண்முகம் தோற்றார். நேர்மையை விரும்பும் பலருக்கும் இந்தத் தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேர்தல் முடிவால் வேதனையடைந்த சண்முகம் ஊடகத்திடம் கூறுகையில், “மக்கள்கிட்ட விசுவாசம் இல்லன்னுதான் சொல்லணும். எங்க அப்பா காலத்துல இருந்து ஓடந்துறை பஞ்சாயத்துக்காக உழைச்சுகிட்டு இருக்கோம்.
“நேருக்கு நேர் என்னை எதிர்த்து ஜெயிக்க முடியாதுனு நினைச்சவங்க மக்களுக்கு காசு கொடுத்து திசைதிருப்பிட்டாங்க. மக்களும் கடந்த காலத்த பத்தியெல்லாம் நினைச்சுப் பார்க்காம அவங்க கொடுத்த 1,000 ரூபாய் தான் பெருசுனு அவங்களுக்கு ஓட்டு போட்டுட்டாங்க. மக்களுக்கு இவ்வளவு பண்ணியும் 1,000 ரூபாய்தான் வெற்றிய தீர்மானிக்குதுன்னு நினைக்கிறப்ப கஷ்டமா இருக்கு,” என்றார்.