ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது

ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது

2 mins read
67813d0f-6ff0-4cf3-b945-6ce6c398fec7
மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சவுந்தர்ராஜன், சண்முகம் உள்ளிட்ட பிரமுகர்களையும் போலிசார் கைது செய்து காவல் வேனில் ஏற்றிச்சென்றனர். படம்: ஊடகம் -

சென்னை: தமிழகம் எங்கும் பல பகுதிகளிலும் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டவர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர். இதனால் பல பகுதிகளும் பதற்றமாகக் காணப்பட்டன.

மக்களின் போராட்டம் காரண மாக ஆங்காங்கே கடைகள் மூடப்பட்டன. சில இடங்களில் போக்கு வரத்துகள் முடங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகும் நிலை தென்பட்டது.

வேலையின்மை பிரச்சினையை போக்கிட வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் சட்டங்களைத் தொழிலாளர்களுக்கு சாதகமான முறையில் திருத்தி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னை அண்ணாசாலையில் தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தர் ராஜன், தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் நடராஜன் உள்ளிட்ட 1,200 பேரை போலிசார் கைது செய்தனர்.

தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, மதிமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தாராபூர் டவர் அருகில் கூடி மத்திய அரசுக்கு எதிராக முழங்கினர்.

சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை போலிசார் வலுக்கட்டாயமாக கைது செய்து, தூக்கிச் சென்று காவல் வேனுக்குள் போட்டனர்.

இதைத்தொடர்ந்து போலிசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே வாய்த்தகராறும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

மறியல் போராட்டத்தால் அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

வண்ணாரப்பேட்டையில் மறியலில் ஈடுபட்ட ராமகிருஷ்ணன் உட்பட 500 பேரை கைது செய்தனர்.

திருவள்ளூர் உழவர் சந்தை அருகே தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது 100க்கும் மேற்பட்டோர் கைதாகினர். இதேபோல் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சாலை மறியலில் ஈடுபட்ட 88 பெண்கள் உட்பட 216 தொழிற்சங்கத்தினர் கைதாகினர்.

பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 500 பேர், காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 165 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.