கூந்தலை விற்று பிள்ளைகளின் பசி தீர்த்த தாய்

கூந்தலை விற்று பிள்ளைகளின் பசி தீர்த்த தாய்

2 mins read
5df05ca2-586e-4259-a711-3a32fa5e9bf1
பிரேமா தனது பிள்ளைகளுடன். படம்: ஊடகம் -

சேலம்: சேலம், வீமனூரில் வறுமை யின் பிடியில் சிக்கிய பிரேமா என்ற பெண் தனது தலையை மொட்டை அடித்து, தலைமுடியை விற்று அதில் கிடைத்த பணத்தில் பசியால் துவண்டு அழுத தனது குழந்தைகளுக்கு உணவு வாங்கிக் கொடுத்து பசியைப் போக்கி உள்ளார் . இந்தச் செய்தியறிந்த அவ்வூர் மக்கள் பலரும் பிரேமாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

வீமனூர் பகுதியைச் சேர்ந்த பாலா, 32, என்பவர் பிரேமாவைச் சந்தித்து உணவுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அத்துடன் பிரேமாவை கந்து வட்டி கும்பலிடம் இருந்து மீட்கும் முயற்சியில் இளைஞர்கள் சிலரும் ஈடுபட்டுள்ளனர்.

பாலா கூறுகையில், "ஃபேஸ்புக் கில் பிரேமாவின் நிலை குறித்து பதிவிட்டோம். ரூ.1 லட்சம் ரூபாய் வரை நிதி கிடைத்துள்ளது. அதை வைத்து கடன்காரர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அவர்களை அழைத்துப் பேச உள்ளோம். மூன்று குழந்தைகளின் படிப்புக்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்துவருகிறோம்," என்றார்.

இதற்கிடையே பிரேமாவுக்கு தொல்லை கொடுத்து வரும் கந்து வட்டிக் கும்பல் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் செல்வம், 37. இவரது மனைவி பிரேமா, 31. இவர்களுக்கு மூன்று மகன்கள்.

வீமனூர் பகுதியில் 2015ல் செங்கல் சூளையில் பணியாற்றிய இவர்கள், நண்பர் ஒருவரின் யோசனைப்படி பல இடங்களிலும் கடன் வாங்கி செங்கல் சூளை வைத்து நஷ்டப்பட்டனர்.

கடன் தொல்லையால் ஏழு மாதங்களுக்கு முன் செல்வம் தீக்குளித்து உயிரிழந்தார்.

உறவினர்கள் யாரும் உதவ முன் வராத நிலையில், பிரேமா செங்கல் சூளை ஒன்றில் கூலி வேலைக்குச் சென்று வருகிறார்.

கந்துவட்டிக்கு பணம் கொடுத்த வர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கடந்த வாரம் பிரேமாவும் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்.