அரசுப் பணி தேர்வில் முதலிடம் பெற்ற ஆடு மேய்த்தவரிடம் விசாரணை

அரசுப் பணி தேர்வில் முதலிடம் பெற்ற ஆடு மேய்த்தவரிடம் விசாரணை

2 mins read

சிவகங்கை: தமிழக அரசு பணியாளர் தேர்வில் முதலிடம் பெற்ற ஆடு மேய்த்தவரிடம் விசாரணை நடத்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட தேர்வு மையத்தில் எழுதிய மாணவர்கள் முதலிடம் பெற்றதால் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் தேர்வு எழுதிய 3,214 பேர் தேர்ச்சி பெற்றனர். இங்குள்ள இரண்டு மையங்களில் அதிகமானோர் தேர்ச்சி பெற்றது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

மேலும் முதல் 100 இடங்களில் 35 இடங்களை ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் பிடித்ததால் போட்டித்தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதற்கிடையே ராமேசுவரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய சிவகங்கை அருகே உள்ள பெரிய கண்ணனூரைச் சேர்ந்த திருவராஜூ 288.5 மதிப்பெண்களைப் பெற்று 'குரூப்-4' தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு மையங்கள் இருந்தும் ராமேசுவரத்தில் இவர் தேர்வு எழுதியது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அவரிடம் விசாரணை நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. இந்த விசாரணைக்காக வருகிற 13ஆம் தேதி சென்னை வரும்படி திருவராஜூவுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய திருவராஜூ, "சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு சிவகங்கை அரசு கல்லூரியில் 'பிஎஸ்சி' கணிதம் முடித்துள்ளேன். தற்போது ஆடு மேய்த்து வரும் நான் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியோடு படித்து வந்தேன். இதுவரை ஏழு முறை டிஎன்பிஎஸ்சி. தேர்வு எழுதியுள்ளேன். எனது விடாமுயற்சியால் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளேன்," என்று கூறியுள்ளார். இது தவிர குறிப்பிட்ட மையங்களில் தேர்வு எழுதி முதலிடம் பெற்ற மற்ற மாணவர் களும் விசாரிக்கப்படுகின்றனர்.