அதிமுக, திமுக போட்டி நடுவே அமமுக கவுன்சிலர்கள் மாயம்

அதிமுக, திமுக போட்டி நடுவே அமமுக கவுன்சிலர்கள் மாயம்

2 mins read

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியைப் பிடிக்க அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டா போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அங்கு அமமுக கட்சியைச் சேர்ந்த இரண்டு கவுன்சிலர்களை காணவில்லை என்று போலிசிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த இரண்டு பெண்களும் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ள புகாரின் பேரில் போலிசார் முழு மூச்சான விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.

அண்மையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுகவின் பலம் 7 ஆக இருக்கிறது. திமுகவின் பலம் 5 ஆக உள்ளது.

அங்கு அமமுக கவுன்சிலர்கள் இரண்டு பேர் இருக்கிறார்கள்.

புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

அந்த ஒன்றியத்தில் அமமுக சார்பில் 13வது வார்டு கவுன்சிலராக சுப்புலெட்சுமி என்பவரும் 14வது வார்டு கவுன்சிலராக மாடத்தி என்பவரும் அமமுக சார்பில் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்கள் இருவரையும் திடீரென காணவில்லை என்றும் யாரோ இவர்களைக் கடத்திச் சென்று இருக்கிறார்கள் என்றும் மலையாண்டி என்பவர் போலிஸ் இணையச் செயலி மூலம் புகார் தெரிவித்து இருக்கிறார்.

அந்த இருவரையும் மீட்டுத் தரும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒன்றியத் தலைவர் பதவியைப் பிடிக்க அதிமுகவும் திமுகவும் கடும் போட்டியிடும் சூழலில் கவுன்சிலர்கள் காணாமல் போயிருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.