மோசமான சென்னை சாலைகள்: 266 பேர் பலி

2 mins read
393943dd-0e53-42b4-9fc0-1b76261f3435
சென்னையில் சாலைகள் முறையாக பராமரிக்கப் படாததால் பல இடங்களிலும் இப்படிப்பட்ட நிலை காணப்படுகிறது. -

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மூர்க்கத்தனமாக வாகனங்களை ஓட்டிச் சென்றதால் ஏற்பட்ட உயிர்ச்சேதத்தைவிட அந்த நகரின் படுமோசமான சாலைகளே அதிகம் பேரைக் கொன்றுவிட்டன.

தேசிய குற்றச்செயல் பதிவு இலாகா வெளியிட்டு உள்ள 2018 சாலை விபத்து அறிக்கை இதனை தெரிவித்தது.

சென்னையில் முறையான சாலை வசதிகள் இல்லாத காரணத்தால் நிகழ்ந்த விபத்துகளின் மூலம் 266 பேர் மாண்டுவிட்டனர். அதேவேளையில், மூர்க்கமாக வாகனங்களை ஓட்டிச்சென்றதன் விளைவாக நிகழ்ந்த விபத்துகள் மூலம் 62 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

மோசமான சாலைகள் காரணமாக நிகழ்ந்த விபத்துகளை அடிப்படையாக வைத்து இந்திய நகர்களை ஒப்பிட்டு பார்க்கையில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது.

நாடு முழுவதும் நிகழ்ந்த இத்தகைய விபத்துகளில் 80 விழுக்காட்டு விபத்துகள் சென்னையில் நிகழ்ந்து இருக்கின்றன.

சாலைகளில் குழிகளை தோண்டும் பல்வேறு அரசாங்க அமைப்புகள் பெரும்பாலும் அந்தக் குழிகளை மூடாமல் அப்படியே விட்டுவிட்டுச் செல்கின்றன.

இரவு நேரத்தில் நடக்கும் சாலைப் பணிகளும் பேராபத்தை ஏற்படுத்துகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.

இருந்தாலும் மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக எப்போதுமே தாங்கள் போதிய அளவுக்கு முயற்சிகளை எடுத்து சாலைகளில் எல்லாருக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக சென்னை மாநகர அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

நடப்பு சாலைகளைப் பராமரிக்க ஆண்டுதோறும் ரூ. 120 கோடிக்கும் அதிகத் தொகையை மாநகராட்சி செலவிட்டு வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

சாலைகளில் சட்டவிரோதமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் காரணமாக 392 விபத்துகள் நிகழ்ந்ததாகவும் அவற்றில் 73 பேர் மாண்டுவிட்டதாகவும் தேசிய குற்றச்செயல் பதிவு இலாகா அறிக்கை தெரிவிக்கிறது.