கீழடி ஆய்வு கண்டுபிடிப்புகள் 24 மொழிகளில் நூலாக வெளியீடு; உலகெங்கும் விநியோகம்

கீழடி ஆய்வு கண்டுபிடிப்புகள் 24 மொழிகளில் நூலாக வெளியீடு; உலகெங்கும் விநியோகம்

1 mins read
2a481a94-049b-455d-8615-6803b72bca6c
கீழடியில் அகழாய்வு செய்யப்பட்ட இடம்போன்று தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ள காட்சிக் கூடம். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்று வரும் 43வது புத்தகக் காட்சியில் 750க்கும் அதிகமான அரங்குகளுடன் 2 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பிடித்துள்ளன.

தொல்லியல் துறை சார்பில் தொல்பொருள் கண்காட்சி ஒன்று இங்குள்ள அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டும் செயற்கை மாதிரிகளாலும் கீழடியில் அகழாய்வு செய்யப்பட்ட இடம் போன்றே தத்ரூபமாக அமைக் கப்பட்டுள்ளது இந்த அரங்கு.

திமில் உள்ள காளைகளின் எழும்புத்துண்டுகள், 2,600 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட செங்கற்கள், மண்பாண்டங்களில் தமிழ் - பிராமி எழுத்துகளால் ஆன கீறல்கள், மணி வகைகள், வட்டசில்லுகள் என அரிய பழம்பொருட்கள் பலவும் கண்ணாடிப் பேழைக்குள் வைத்து மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தபட்டுள்ளன.

இந்நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது கீழடி ஆய்வு குறித்த அறிக்கை தமிழ், ஆங்கிலம் உள்பட 24 மொழிகளில் புத்தகமாக வெளிவந்துள்ளது என்றார்.

அவற்றை உலகம் முழுவதும் உள்ள முன்னணி நூலகங்களுக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.