நகைப் பையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு, பரிசு

நகைப் பையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு, பரிசு

1 mins read
e0e404b4-218b-40ae-a86e-d25bd34c4712
கீழே கிடந்த நகைப்பையை காவல்துறை மூலம் உரியவரிடம் ஒப்படைக்கும் ஆட்டோ ஓட்டுநர் கோபு. (காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட படம்). -

கோவை: பெண் தவறவிட்ட 2.34 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை போலிசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் பலரும் மனம் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

"கண்டெடுத்த பொருளை வைத்து அவரவர்களும் அவரவர்கள் தேவையைத்தான் நிறைவேற்றிக்கொள்ள பார்ப்பார்கள், இப்படி கொடுக்க ஒருவருக்குமே நல்ல மனது வராது," என்று கூறி ஆட்டோ ஓட்டுநரைப் புகழ்ந்து பாராட்டியுள்ளனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் கோபு, 37. இவர் கோவை சாய்பாபா காலனி, கே.கே.புதுாரில் வசித்து வருகிறார். பகலில் கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகவும் இரவில் ஆட்டோ ஓட்டுநராகவும் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு செஞ்சிலுவை சங்கம் அருகே சென்றபோது, சாலையில் கிடந்த பையை எடுத்துப் பார்த்தால், அதில், 39 கிராம் தங்க நகையும் அதை வாங்கியதற்கான ரசீதும் இருந்தது. இதை ரேஸ்கோர்ஸ் போலிசாரிடம் கோபு ஒப்படைத்தார்.

விசாரணையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த காயத்ரி, 37, என்பவர் கோவை, ராமநாதபுரம் ரெயின்போ காலனியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்லும்போது நகைப் பையைத் தவறவிட்டது தெரியவந்தது. காயத்ரியின் பெற்றோரிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டன. கோபுவை கோவை மாநகர ஆணையர் சுமித் சரண் பாராட்டி, பரிசுகள் வழங்கினார்.