தமிழ்நாட்டில் 92 பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் அபாயம்

தமிழ்நாட்டில் 92 பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் அபாயம்

2 mins read

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, தமிழகத்தில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் செயல்படும் 92 பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழந்து, மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போதிய ஆசிரியர்களும் உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாததால் நடப்பு கல்வியாண்டில் அந்த கல்லூரிகளில் 25 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் குறைத்தது.

சென்னையில் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி), திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) ஆகிய உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த குழுவினர் தமிழ்நாட்டில் உள்ள 537 பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளித்தனர்.

இதன்மூலம், 92 கல்லூரிகளில் 25 விழுக்காட்டிற்கும் மேல் உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அடிப்படையிலேயே அந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் குறைத்தது.

இந்த முடிவை எதிர்த்து, தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு தனியார் பொறியியல் கல்லூரி உயர் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி மன்றம் நிர்ணயித்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைக்க அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சட்டபூர்வ அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர்.

அத்துடன், "உள்கட்டமைப்பு வசதிகள் இல்லையெனில் சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்வது அல்லது தற்காலிகமாக நிறுத்திவைப்பது போன்ற நடவடிக்கைகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் எதுவும் கூறாதது ஏன்?" என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், மாணவர் சேர்க்கையைக் குறைத்தது தொடர்பில் குறிப்பிட்ட காலத்திற்குள் பல்கலைக்கழகம் அறிக்கை தாக்கல் செய்யவும் அவர்கள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், மாணவர் சேர்க்கையைக் குறைப்பதைவிட குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளை ரத்து செய்வது இன்னும் கடுமையான நடவடிக்கையாக இருக்கும் எனக் கூறியுள்ளார் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி.

விதிகளை மீறிச் செயல்படும் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வியின் தரம் தாழ்ந்துபோனதற்கு அனைத்திந்திய தொழில்நுட்ப மன்றமே காரணம். மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டதற்கும் உரிய வசதிகள் இன்றி அவை தொடர்ந்து செயல்படுவதற்கும் அந்த அமைப்பே பொறுப்பு," என்றும் அவர் குறைகூறினார்.

புதிய பாடப்பிரிவுகளில் ஆர்வம்

இதனிடையே, பொறியியல் கல்வி மீதான மோகம் குறைந்து வரும் நிலையில், மாணவர் சேர்க்கை மேலும் குறைந்துவிடாமல் தடுக்க செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் போன்ற புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்க அனுமதி வேண்டி 35க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்துள்ளன.