அவனியாபுரத்தில் இன்று: கட்டுக்கடங்காத உற்சாகம்

மதுரை: உலகப் புகழ்பெற்ற தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு காளை அடக்கும் போட்டி இன்று தொடங்குகிறது. 

பொங்கல் நாளான இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடக்கவிருக்கும் போட்டியில்  700 காளைகள் பங்கெடுத்துக் கொள்கின்றன. அவற்றை அடக்கி தாங்கள் வீரர்கள் என்பதை மெய்ப்பிப்பதற்காக 730 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்து கொண்டு இருக்கிறார்கள். 

இந்தப் போட்டிக்கான கால்கோள் விழா திங்கட்கிழமை மிகவும் ஊக்கத்துடன் நடந்தது.

அவனியாபுரத்தைத் தொடர்ந்து பாலமேட்டில்   நாளை வியாழக்கிழமை ஜல்லிக்கட்டு நடக்கிறது. அடுத்த நாளன்று மிகவும் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது. 

ஜல்லிக்கட்டு காளை அடக்கும் போட்டிகளைத் திறம்பட நடத்தி முடிக்கும் பெரும் பொறுப்பை மேற்கொண்டிருக்கும் மதுரை மாவட்ட நிர்வாகம், அதற்காக ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பொங்கலின்போது நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகளவில் மிகவும் பிரபலமானவை. 

அந்தப் போட்டியைக் காண பெரும் கூட்டம் திரளும். வெளிநாட்டினரும் அதிக எண்ணிக்கையில் வருவர். அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள முன்வரும் மாடுபிடி வீரர்கள் தங்களைப் பதிந்துகொள்வதற்காக திங்கட்கிழமை அங்கு கூடினர். 

தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான இளைஞர்கள் திரண்டு ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயன்றதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. அதனால் போலிசார் தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர். 

பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு சென்ற வாரமே நடந்துவிட்டது. 

மாடு பிடிக்க முன்வரும் வீரர்களின் வயது, ரத்த அழுத்தம், எடை, உயரம் அனைத்தும் சோதிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் ஏராளமான வீரர்கள் காயம் அடைவதும் மரணம் அடைவதும் தொடரும் நிலவரமாக இருந்து வருகிறது.