பாலியல் கொடுமை: நால்வரும் சாகும்வரை சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும்

தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் கும்பகோணம் நகரில், 27 வயதான ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நான்கு பேரும் சாகும் வரையில் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தஞ்சாவூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

பாதிக்கப்பட்ட பெண் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்தச் சம்பவம் 2018 டிசம்பர் 1ஆம் தேதி நிகழ்ந்தது. 

அந்தப் பெண், வங்கி ஊழியர் பயிற்சிக்காக கும்பகோணம் வந்தார். ரயில் மூலம் வந்த அவர், இரவு 11 மணி அளவில் ஆட்டோ ஒன்றைப் பிடித்து தங்கும் விடுதிக்குச் செல்ல கிளம்பினார். 

ஆட்டோ வழி மாறிச் சென்றதை தன்னுடைய கைபேசியில்  கூகல் படம் மூலம் கண்டுபிடித்துவிட்ட அந்தப் பெண், தப்பிக்க முயன்று திடீரென்று ஆட்டோவில் இருந்து குதித்துவிட்டார். 

இந்த நிலையில், ஆட்டோவை ஓட்டி வந்த குருமூர்த்தி, 26, என்பவர் அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

அப்போது தனியே நின்ற அந்தப் பெண்ணை அணுகிய தினேஷ், 26, புருஷோத்தமன், 21, அன்பரசன், 21, வசந்த், 23, ஆகியோர் பலவந்தமாக அந்தப் பெண்ணைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர். 

அப்போது அந்த நால்வரும் கஞ்சா போதையில் இருந்ததாகப் பின்னர் தெரியவந்தது. 

பாதிக்கப்பட்ட பெண் போலிசிடம் புகார் செய்தார். உடனடியாக வேட்டையைத் தொடங்கிய போலிசார் ஆட்டோவை ஓட்டி வந்த குருமூர்த்தி உட்பட ஐந்து பேரையும் கைதுசெய்தனர். 

இந்த வழக்கை கும்பகோணம் மகளிர் நீதிமன்றம் விசாரித்தது. 

ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்திக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

இதர நால்வரும் இயற்கையாக மரணம் அடையும் வரை சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதோடு குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டரை லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. 

இந்தத் தொகை போதவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் கூறினால் தமிழக அரசு சார்பிலும் அவருக்கு நிவாரணத் தொகை கிடைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. 

இந்த வழக்கைப் பொறுத்தவரையில் சம்பவம் நிகழ்ந்த 84வது நாளிலேயே 700 பக்க குற்றப் பத்திரிகையை ஏராளமான ஆதாரங்களுடன் தாக்கல் செய்த போலிசை நீதிமன்றம் மிகவும் பாராட்டியது.