வெங்கடேசன்: கருத்துச் சுதந்திரத்தை காவு கொடுக்க முடியாது

சென்னை: எந்தக் காரணத்துக்காகவும் எழுத்தாளனின் உரிமையை, கருத்துச் சுதந்திரத்தை காவு கொடுக்க முடியாது என்று எழுத்தாளரும் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் ஊடகவியலாளர் அன்பழகன்  தமிழக அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்பனைக்கு வைத்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்து வெளியேறுமாறு ஏற்பாட்டாளர்கள் உத்தரவிட்டனர்.

இதற்கு அவர் மறுத்ததையடுத்து, ஏற்பாட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். இதற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘கீழடி ஈரடி’ என்ற தலைப்பில் உரையாற்ற எம்.பியும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் அழைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் மேடையில் உரையாற்ற மறுத்த அவர், அரசுக்கும், அரசாங்கத்திற்கும் எதிரான சர்ச்சைக்குரிய புத்தகங்களை வைத்திருப்பது விதிமீறல் என்று கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

“அப்படிப் பார்த்தால் மகாத்மா காந்தியின் ஒரு புத்தகத்தைக் கூட இந்த புத்தகக் கண்காட்சியில் வைக்கக் கூடாது. அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, பெரியாரின் எந்த புத்தகத்தையும் இங்கு வைக்கக் கூடாது. ஏன் சமையல் கலை புத்தகம் கூட இடம்பெறக் கூடாது.

“ஏனெனில் அதில் வெங்காயத்தை பற்றி குறிப்பிருக்கும். அது மத்திய அரசுக்கு எதிரானது. அதை எப்படி வைக்க முடியும்?,” என்று கேள்வி எழுப்பினார் வெங்கடேசன்.

கீழடி என்று சொன்னாலே மத்திய அரசுக்கு எதிரானது என்பது தான் நேரடியான பொருள் என்று குறிப்பிட்ட அவர், மத்திய அரசு கீழடியை தனக்கு எதிரான ஒன்றாகக் கருதுகிறது என்றார்.

“புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் இருக்கலாம். அதற்காக கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கக் கூடாது,” என்றார் வெங்கடேசன்.