துரைமுருகன்: காங்கிரஸ் விலகிப்போவதால் எங்களுக்கு நஷ்டமுமில்லை; கவலையுமில்லை

வேலூர்: திமுக-காங்கிரஸ் கட்சிகளிடையே ஏற்பட்ட உரசல் விரிவடைந்து வரும் நிலையில், கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிப்போனால் போகட்டும். அதைப்பற்றியெல்லாம் இங்கு யாருக்கும் கவலையில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி யில் நடைபெற்ற பொங்கல் விழா வில் கலந்துகொண்ட துரை முருகன் செய்தியாளர்களைச்  சந்தித்துப் பேசியபோது,    “காங்கிரஸ் எங்கள் கூட்டணி யிலிருந்து விலகிப்போனால்  போகட்டும். எங்களுக்கு அத னால் நஷ்டமில்லை. நாங்கள் அதைப்பற்றி கவலைப்படப்போவ தும் இல்லை. அவர்களுக்கு வாக்குகளே கிடையாது. அத னால் எங்களுக்கு எந்த பாதிப்பு மில்லை,” என்று தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் திமுகவை விமர்சித்திருந்தார் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் கே.எஸ்.அழகிரி. 

இரு கட்டங்களாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய,  மாவட்டத் தலைவர் பதவி இடங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் குழுவுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை எனவும் கே.எஸ்.அழகிரி கடந்த சில தினங்களுக்கு முன்னால் அறிக்கை வாயிலாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதனால் திமுக தரப்பில் இருந்து காங்கிரஸ் மீது புகைமூட்டம் கிளம்பியது. மேலும் அந்த அறிக்கை இரு கட்சிகளுக்கும் இடையேயான இடைவெளியை அதிகப்படுத்தியது. 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கே.எஸ்.அழகிரி, திமுக தலைமையைச் சமாதானப்படுத்தும் விதமாக மீண்டும் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

இருப்பினும் பாஜகவின் தேசிய குடியுரிமைச் சட்டத்துக்கும் குடி மக்கள் பதிவேடு திட்டத்துக்கும் எதிராக  சோனியா தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட எதிர்க்கட்சி களின் கூட்டு ஆலோசனைக் கூட்டத்தை திமுக புறக்கணித்தது. இது அரசியல் வட்டாரத்தில் சூட்டைக் கிளப்பிவிட்டது.

இதைத் தொடர்ந்து  செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு, “திமுக குறித்த அறிக்கையை கேஎஸ் அழகிரி தவிர்த்திருக்கலாம். மேலும் கட்சித் தொண்டர்கள் கவலையில் உள்ளார்கள். குறிப்பாக இந்த அறிக்கையின்படி, தலைவர் மீது வைத்த குற்றச்சாட்டாகவே நாங்கள் அதைப் பார்க்கிறோம். அதனடிப்படையிலேயே டெல்லியில் காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. திமுக - காங் கிரஸ் கூட்டணி பழைய நிலைக்குத் திரும்புமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்,” என்றார்.