காணும் பொங்கல்: எங்கும் கூட்டம்

காணும் பொங்கல்: எங்கும் கூட்டம்

1 mins read
f515a35f-7054-446a-bd73-b6c20b6b310b
'இளவட்டக்கல்' என்ற கனமான கல்லைத் தூக்கி தன் பலத்தைக் காட்டும் இளையர்கள். படம்: இணையம் -

சென்னை: பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளான நேற்று காணும் பொங்கல் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் பொழுது போக்கு இடங்களில் மக்கள் குடும்பம் குடும்பமாகக் கூடி மகிழ்ந்தனர். சென்னை நகரில் மட்டும் 10,000 போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். வீர விளையாட்டுகளும் கேளிக்கை நிகழ்ச்சிகளும் மாநிலத்தின் பல இடங்களிலும் இடம்பெற்று சிறார் முதல் முதியவர் வரை எல்லாரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் எங்கும் தங்கள் பழைய பாரம்பரியங்களைக் கூடுமானவரையில் கட்டிக்காக்க மக்கள் முயன்றனர். காளையை அடக்கி, 'இளவட்டக்கல்' என்ற கனமான கல்லைத் தூக்கி தன் பலத்தைக் காட்டும் ஆண்மகனை அந்தக் கால சமூகம் போற்றி, புகழ்ந்து, வரவேற்றுக் கொண்டாடியது. இந்தப் பாரம்பரியத்தை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் 70 முதல் 100 கிலோ எடையுள்ள வழுவழுப்புடன் உருண்டையாக இருந்த ஐந்து கற்களைத் தூக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று இளவட்டக்கல் தூக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுபோல் பல இடங்களிலும் போட்டிகள் நடந்தன. படம்: தமிழக ஊடகம்