கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் காட்டுப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற பெண்ணை யானை தூக்கி வீசியதில் உயிரிழந்துள்ளார்.
கோவை கணபதி மாநகரைச் சேர்ந்தவர் பிரசாந்த். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி புவனேஸ்வரி, 40. சங்கரா கண் மருத்துவமனையில் நிர்வாகப் பிரிவு ஊழியராக இருந்தார்.
இவர்கள் இருவரும் சில நண்பர்களுடன் இணைந்து கவுண்டம்பாளையம் அருகேயுள்ள பாலமலை பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
பாலமலை-குஞ்சூர் சாலை வழியாக பசுமணி பகுதியில் செல்லும்போது யானை ஒன்று வந்துள்ளது. பயிற்சியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சிதறி ஓட, தப்பியோட முயன்ற புவனேஸ்வரியைத் துரத்தியது காட்டு யானை.
ஒரு கட்டத்துக்கு மேல் ஓட முடியாத புவனேஸ்வரி, புதர் ஒன்றின் பின்னல் சென்று மறைந்திருந்ததாகவும், அவரைக் கண்டுபிடித்த யானை தூக்கி வீசியதாகவும் கூறப்பட்டது. இதில் பலத்த காயமடைந்த புவனேஸ்வரி உயிரிழந்தார்.
வனத்துறையினர் புவனேஸ்வரியின் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, "வனப்பகுதிகளுக்குள் வனத்துறையினரின் அனுமதியின்றி யாரும் நுழையக் கூடாது. சம்பவம் நிகழ்ந்த பாலமலை வனப்பகுதி, அடர்ந்த காட்டுப்பகுதி. இங்கு காட்டு யானைகள் உலவுவதால் நாங்கள் யாரையும் உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. இப்பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி மக்களைக்கூட இரவு நேரங்களில் வெளியே வரக்கூடாது என எச்சரித்துள்ளோம்.
"இந்நிலையில், யானையிடம் சிக்கிய பெண் உயிரிழந்துள்ளார். வனத் துறையினரின் அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சிக்குச் செல்வோர் மீதும் வனப்பகுதிக்குள் நுழைவோர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றனர்.
#தமிழ்முரசு #டிரெக்கிங்

