சென்னை: தமிழக பாஜகவிற்கு தோதான புதிய தலைவராக யாரைத்தான் நியமிப்பது என்பது தெரியாமல் பாஜக தலைமை குழம்பி வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
தமிழக பாஜகவிற்கு உள்ளேயே நிறைய உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கட்சித் தொண்டர்கள் எல்லோரும் அணி அணியாகப் பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள்.
இதனால் ஒருவரைத் தலை வராக தேர்வு செய்தால் மற்றொரு குழு கோபம் அடையும் என்பதால் தலைவரை தேர்வு செய்வதில் பாஜக பெரும் சிக்கலை எதிர் நோக்கி வருகிறது.
அதிமுகவுடன் இணக்கமாக செல்லும் தலைவரை தேர்வு செய்ய பாஜக தேசிய தலைமை விரும்பு கிறது. ஆனால் தமிழிசை அள விற்கு தமிழக பாஜகவில் இப்போது அப்படி இணக்கமாகச் செல்லக் கூடிய தலைவர் யாருமில்லை என்றும் கூறப்படுகிறது.
தமிழக பாஜக தலைவர் பதவி என்பது மிகவும் கஷ்டமான பதவி. நிறைய விமர்சனங்களையும் மீம்ஸ் களையும் எதிர்கொள்ள வேண்டும். முக்கியமாக கட்சியின் தலைவர்கள் பேசும் சர்ச்சை கருத்துகளையும் சமாளிக்க வேண்டும்.
இதனால் சில முக்கிய உறுப்பினர்கள் தலைவர் பதவி கொடுத்தாலும் வேண்டாம் என்றும் சொல்லும் முடிவில்தான் உள்ளனர்.
இதுவும் கூட தலைவரை தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட காரணமாகக் கூறப்படுகிறது.
இதனால் யாரைத்தான் தலைவராக தேர்வு செய்வது எனத் தெரியாமல் தேசிய பாஜக தலைமை குழம்பி வருகிறது.
கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக உள்ளது.
தெலுங்கானா ஆளுநராக தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி ஏற்றார். அதன்பின் புதிய தலைவர் தமிழக பாஜகவிற்கு நியமனம் செய்யப்படவில்லை.
இந்த தலைவர் பதவிக்காக எச்.ராஜா, பி. முருகானந்தம், சி.பி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.
வட இந்திய தலைவர்கள் சிலரை தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தமிழக தலைமையாக பரிந்துரை செய்துள்ளார். உத்தர பிரதேச, பீகார் பாணியிலான அரசியலை தமிழகத்தில் கொண்டு வர அவர் ஆலோசித்துள்ளார். ஆனால் இதற்கு சில தமிழக பாஜக தலைகள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் எச். ராஜா, பி.முருகானந்தம், சி.பி ராதா கிருஷ்ணன், வானதி ஸ்ரீநிவாசன் என பலர் உள்ளனர். இவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இல்லையெனில் தமிழக பாஜகவிற்காக உழைத்தவர்களுக்கு பதவி கொடுக்கவேண்டும். வெளி ஆட்கள் வரக்கூடாது என்றும் சிலர் கூறியுள்ளனர்.

