தம்பியைக் கொன்ற அண்ணன்; கொலைக்கு ஆயுள் தண்டனை, தடயங்களை மறைத்ததற்கு 7 ஆண்டு சிறை

தம்பியைக் கொன்ற அண்ணன்; கொலைக்கு ஆயுள் தண்டனை, தடயங்களை மறைத்ததற்கு 7 ஆண்டு சிறை

2 mins read
bb2abfd4-48ac-4941-8e73-d3eb4b446f6f
இளைய மகனைக் காணாமல் தவித்த, அவர்களது தாயார், பாண்டியராஜனின் (படம்) வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது, சுந்தரபாண்டியன் தற்கொலை செய்துகொண்டதாகவும் அதனால் மயானத்தில் புதைத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. படம்: இந்திய ஊடகம் -

தேனி மாவட்டம் சிவாஜி நகரைச் சேர்ந்த 39 வயது பாண்டியராஜனுக்கு தனபாண்டியன் (31), சுந்தரபாண்டியன் (27) என இரண்டு தம்பிகள் இருந்தனர். இவர்களுக்கிடையே சொத்து தகராறு இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. பாண்டியராஜன் ஆட்டோ ஓட்டியதாகவும் மற்ற இரண்டு சகோதரர்களும் கூலி வேலை செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வாக்குவாதம் முற்றிப்போய், தனபாண்டியனை பாண்டியராஜன் தாக்கியதால் அதனைத் தட்டிக்கேட்க பாண்டியராஜனின் வீட்டுக்குச் சென்றார் சுந்தரபாண்டியன்.

வாக்குவாதம் வலுத்ததில், கயிற்றை எடுத்து தம்பி சுந்தரபாண்டியனின் கழுத்தை நெரித்து கொலை செய்தார் அண்ணன் பாண்டியராஜன்.

பின்னர் உடலை, அருகே இருக்கும் மயானத்துக்கு சுந்தரபாண்டியனின் உடலைக் கொண்டு சென்ற பாண்டியராஜன், அதனைப் புதைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இளைய மகனைக் காணாமல் தவித்த, அவர்களது தாயார், பாண்டியராஜனின் வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது, சுந்தரபாண்டியன் தற்கொலை செய்துகொண்டதாகவும் அதனால் மயானத்தில் புதைத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

சுந்தரபாண்டியன் மரணத்தில் சந்தேகம் கொண்ட தாயார், தேனி காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலிசார் பாண்டியராஜனைக் கைது செய்தனர்.

சுந்தரபாண்டியனின் மீட்கப்பட்ட சடலத்தை போலிசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். சுந்தரபாண்டியன் கழுத்து நெறிபட்டு இறந்துபோனது உறுதிசெய்யப்பட்டது.

வழக்கு விசாரணை தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

இந்த நிலையில், விசாரணை முடிந்து, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி அப்துல் காதர் நேற்று (ஜனவரி 21) தீர்ப்பு வழங்கினார்.

தன் தம்பியைக் கொலை செய்ததற்காக பாண்டியராஜனுக்கு ஆயுள் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்டத் தவறினால் அவர் ஓர் ஆண்டு கூடுதல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மேலும், கொலை செய்து, தடயங்களை மறைக்க முயற்சி செய்த குற்றத்துக்காக 7 ஆண்டு சிறைத் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்டத் தவறினால் ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

முதலில் 7 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து முடித்த பின்னர் ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நிதிபதி தீர்ப்பளித்தார்.

தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன், பாண்டியராஜன் மதுரை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்னொரு தம்பி தனபாண்டியனை பாண்டியராஜன் கொலை செய்ய முயற்சி செய்ததன் தொடர்பிலான வழக்கு அதே நீதிமன்றத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

#தமிழ்முரசு #தேனி #அண்ணன்தம்பி

குறிப்புச் சொற்கள்