சென்னை விமான நிலையத்தில் அனைத்துலக தரத்தில் ஐந்து திரையரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
பயணிகள் மற்றும் அவர்களை வரவேற்பவர்கள் காத்திருக்கும் காலத்தில் பொழுதைப் போக்க 5 நவீன திரையரங்குகளை அமைக்க பிரபல பி.வி.ஆர்.சினிமாஸ் நிறுவனம் திட்டமிடுகிறது.
இந்த நிறுவனம் 50 நகரங்களில் 584 திரைகளை வைத்துள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டுக்குள் 2000 திரைகளை அமைத்துவிடும் முயற்சியில் அது இறங்கியிருக்கிறது.
அதன் ஓர் அங்கமாக, சென்னை விமான நிலையத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் பல அடுக்கு கார் நிறுத்தும் கட்டடத்தில் பி.வி.ஆர். நிறுவனம், 5 திரைகளை கொண்ட 'மல்டிபிளக்ஸ்' சினிமா தியேட்டர்களை அமைக்க உள்ளது.
சென்னை விமானநிலையத்தில் சுமார் ரூ.250 கோடி செலவில் கார் நிறுத்தம், திரையரங்குகள், உணவகங்கள் மற்றும் குளிர்பானக் கடைகள் போன்றவற்றை ஒலிம்பியா குழுமம் தற்போது அமைத்து வருகிறது.
இந்த ஒலிம்பியா குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள பி.வி.ஆர். நிறுவனம், திரையரங்குகள் அமைக்க சுமார் 15 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இதுகுறித்து பி.வி.ஆர்.நிறுவன அதிகாரி பிரமோத் அரோரா, "1,000 இருக்கைகள் கொண்ட 5 திரைகளை உள்ளடக்கிய திரையரங்குகளை அமைக்க உள்ளோம். அடுத்த ஆண்டு மத்தியில் இது செயல்பாட்டுக்கு வரும்.
"20% விமானப் பயணிகளும், 80% வெளியில் இருந்தும் திரைப்படங்கள் பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்," என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
#சென்னைவிமானநிலையம் #திரையரங்கு #தமிழ்முரசு


