பெருவுடையார் கோயிலில் தமிழ் ஆகம விதிப்படி குடமுழுக்கு; வழக்கு ஜனவரி 27க்கு ஒத்தி வைப்பு

பெருவுடையார் கோயிலில் தமிழ் ஆகம விதிப்படி குடமுழுக்கு; வழக்கு ஜனவரி 27க்கு ஒத்தி வைப்பு

2 mins read
74f2c2f8-fdd7-4839-898d-7db190555b18
தஞ்சை பெருவுடையார் கோயிலில். படம்: ஊடகம் -

மதுரை: தஞ்சை பெருவுடையார் கோயிலில் வரும் ஐந்தாம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. அது தமிழ் ஆகம விதிப்படி நடைபெற உரிய உத்தரவு பிறப்பிக்கக் கோரி திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த முறை குடமுழுக்கு எப்படி நடந்தது என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை வழக்கறிஞர் 1980 மற்றும் 1997ம் ஆண்டுகளில் நடந்த முறைப்படியே தற்போதும் குடமுழுக்கு நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

கடந்த முறை தமிழ் ஆகம விதிப்படியும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடத்தப்பட்டதாக கூறிய அவர், இந்த முறை குடமுழுக்கு விழாவில் தேவாரம், திருவாசகம் உள்ளிட்டவற்றை கற்றறிந்த 166 தமிழ் ஓதுவார்கள் வருவதாகவும் கூறினார். தமிழ் ஆகம விதிப்படி மங்கள இசை, வேத பாராயணம், திருமுறை பாராயணம் உள்ளிட்டவற்றுடன் குடமுழுக்கு நடைபெறும் என்றும் வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கோவில் நிர்வாகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.தஞ்சை பெருவுடையார் கோவிலில் நடத்தப்படவிருக்கும் குடமுழுக்கை தமிழில் நடத்த கோரி தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் கோவில் நிர்வாகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் தாக்கல் செய்துள்ள அம்மனு மீதான விசாரணையின்போது, ஆகம விதிப்படியே குடமுழுக்கு நடத்தப்படும் என அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பெரிய கோவில் நிர்வாகத்தை எதிர்மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 27ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.