கணவரைக் காணவில்லை; காவலர் கணவராக முயற்சி

கணவரைக் காணவில்லை; காவலர் கணவராக முயற்சி

1 mins read

திருச்சி: கணவரைக் காணவில்லை என்று புகார் கொடுக்க வந்த ஒரு பெண்ணை மயக்கி அவருடன் நெருக்கமான போலிஸ்காரர் ஒருவரை அதிகாரிகள் வேலையில் இருந்து தற்காலிகமாக நீக்கிவிட்டார்கள்.

திருச்சி அருகே புலிவலத்தைச் சேர்ந்த முகம்மது ஜக்ரியா என்பவர் 7 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணைக் காதலித்து மணம் முடித்தார். ஆனால் காதல் கசந்துவிட்டதை அடுத்து மனைவியைக் கைவிட்டுவிட்டு ஜக்ரியா வேறு ஒரு பெண்ணுடன் எங்கோ ஓடிவிட்டதாக அக்கம்பக்கத்தினர் கூறிவருகிறார்கள்.

இதனிடையே, கணவரைக் காணவில்லை என்று அந்தப் பெண்ணும் தன் தம்பியைக் காணவில்லை என்று முகம்மது ஜக்ரியாவின் அண்ணனான சிராஜுநிஷா என்பவரும் போலிசிடம் தனித்தனியாக புகார் தெரிவித்தனர். புலிவலம் போலிஸ் நிலையத்தில் தலைமை போலிசாக இருந்த ராமர் என்பவர் ஜக்ரியாவின் மனைவியை மயக்கிவிட்டார்.

இதைத் தெரிந்துகொண்ட சிராஜுநிஷா, இருவரையும் கையும் களவுமாகப் பிடிக்கவேண்டும் என்று திட்டமிட்டு காத்திருந்தார்.

அந்தப் பெண்ணின் வீட்டுக்கு வெளியே, கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ராமரின் வாகனத்தைப் பார்த்த சிராஜுநிஷா, உடனே வீட்டின் கதவை இழுத்துப் பூட்டிவிட்டு ஊரைக் கூட்டிவிட்டார்.

உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கதவை உடைத்து இருவரையும் பிடித்தனர்.

இந்த விவகாரத்தை விசாரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக், அந்தப் போலிஸ்காரரைப் பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரைத்தார்.