சென்னை: தமிழ்நாட்டில் அரசாங்கத் தேர்வாணையம் குரூப்-4 தேர்வு மோசடி விவகாரம் சூடுபிடித்து வரும் நிலையில், வேறு ஒரு பிரச்சினை கிளம்பியுள்ளது.
மொத்தம் 1,058 பலதுறை தொழிற்கல்லூரி விரிவுரையாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2017ல் தேர்வு நடத்தப்பட்டது.
அந்தத் தேர்வில் கலந்துகொண்டவர்களில் 196 பேர் தலா ரூ. 25 லட்சம் பணம் கொடுத்து மோசடியில் ஈடுபட்டு அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றார்கள் என்பது பின்னர் தெரியவந்தது.
அதனையடுத்து 2018ல் அந்தத் தேர்வு முற்றிலும் ரத்தானது. இந்த விவகாரம் தொடர்பில் இதுவரையில் 56 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். வழக்கு இன்னமும் முடிந்தபாடில்லை.
இந்த நிலையில், பலதுறை தொழிற்கல்லூரி விரிவுரையாளர் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை ஆசிரியர் ஆட்சேர்ப்பு இலாகா வெளியிட்டு இருக்கிறது.
அதோடு, விண்ணப்பங்களைப் பதியும் நடைமுறையையும் அது தொடங்கி இருக்கிறது.
2017ல் மோசடியில் ஈடுபட்டவர்கள் இப்போது மீண்டும் விண்ணப்பித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. 2017ல் தேர்வு நடந்தபோது இடைத்தரகர்களாகச் செயல்பட்டவர்களில் ஒரு சிலர் மட்டுமே கைதாகி இருக்கிறார்கள்.
அப்போது பணத்தைப் பெற்ற தற்குக் கைமாறாக இந்த முறை நிச்சயம் வேலை வாங்கித் தருவதாக மோசடி பேர்வழிகள் உறுதி தெரிவித்து அதற்கான காய்களை நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இப்போது மாநிலத்தையே உலுக்கி வரும் குரூப் 4 தேர்வு மோசடியில் சிக்கியுள்ள இடைத்தரகர்கள் பலதுறை தொழிற்கல்லூரி தேர்வு தில்லுமுல்லுகளிலும் ஈடுபட்டவர்கள் என்று சிபிசிஐடி போலிஸ் தெரிவித்து இருக்கிறது.
ஆகையால் தொழிற்கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 196 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் தடை விதித்து அவர்கள் இனிமேல் எந்தத் தேர்வையும் எழுத முடியாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தேர்வு எழுதுவோர் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே, குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் இடைத் தரகர்கள் என்று தெரியவந்துள்ள ரமேஷ், முத்துக்குமரன் என்ற அரசு ஊழியர்கள் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குரூப் 4 தேர்வு முறைகேடு விசாரணை தொடர்கிறது.

