பெருவுடையார் கோயில் குடமுழுக்கு: தங்கக்கவசங்கள் ஆய்வு

பெருவுடையார் கோயில் குடமுழுக்கு: தங்கக்கவசங்கள் ஆய்வு

1 mins read
f430ab0a-527f-40ec-8ff1-62a9b9d39dc2
தஞ்சை பெரியகோயில் என்றழைக்கப்படும் பெருவுடையார் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட கலசத்தை ஆய்வு செய்யும் அதிகாரிகள். படம்: தமிழக ஊடகம் -

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பெருவுடையார் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தங்கமுலாம் பூசப்பட்ட கலசங்களை வல்லுநா் குழுவினா் ஆய்வு செய்துள்ளனர்.

இக்கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

இதையொட்டி திருப்பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் பெருவுடையாா் சன்னதி கருவறையில் 216 அடி உயரத்தில் உள்ள விமானத்தின் மீது இருந்த 12 அடி உயர பிரம்மாண்டமான கலசத்தை புனரமைப்பு செய்வதற்காக கடந்த மாதம் 5ஆம் தேதி கீழே இறக்கப்பட்டது.

இதேபோல, அம்பாள், பிள்ளையார், முருகன், வாராஹி, சண்டீகேசுவரா் ஆகிய சன்னதிகளின் கோபுர கலசங்களும் இறக்கப்பட்டன. இதைத்தொடா்ந்து, பாரம்பரிய முறைப்படி இக்கலசங்களைச் சுத்தப்படுத்தி, தங்க முலாம் பூசப்பட்டது.

இப்பணி நிறைவடைந்ததை தொடா்ந்து கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆய்வு மையத்தின் கதிரியக்கப் பிரிவு தலைவா் வெங்கட்ராமன் தலைமையிலான குழுவினரும் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக உலோகவியல் துறை பேராசிரியா் முருகையன் அமிா்தலிங்கம் குழுவினரும் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

இக்குழுவினா் பழைய ஆவணங்களுடன் ஒப்பிட்டு, கலசங்களின் எடையையும் நவீன கருவிகள் மூலம் உலோகத் தன்மையையும் ஆய்வு செய்தனர்.