மக்களை ஏமாற்றும் ஆட்சி நடக்கிறது என்கிறார் கனிமொழி

மக்களை ஏமாற்றும் ஆட்சி நடக்கிறது என்கிறார் கனிமொழி

2 mins read
07ee0a9f-dd62-4bc3-aaba-23edb4b403f5
மக்கள் மனதில் அச்சத்தையும் பிரிவினைவாதத்தையும் விதைக்கக்கூடிய சட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருவதாக திமுக மகளிரணிச் செயலர் கனிமொழி சாடியுள்ளார்.  கோப்புப்படம்: ஊடகம் -
Google News Preferred Icon

தூத்துக்குடி: மக்கள் மனதில் அச்சத்தையும் பிரிவினைவாதத்தையும் விதைக்கக்கூடிய சட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருவதாக திமுக மகளிரணிச் செயலர் கனிமொழி சாடியுள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய அவர், தமிழகத்தில் மக்களை ஏமாற்றக்கூடிய ஆட்சி நடப்பதாக விமர்சித்தார்.

"பாரதிய ஜனதா அரசு தனக்குப் பலம் இருக்கிறது என்ற காரணத்தால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரான சட்டங்களைத் தன் போக்கில் நிறைவேற்றி வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைப் போர்க்கால அடிப்படையில் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். இதனால் இன்று நாடே கொந்தளித்து எழும் சூழ்நிலை உருவாகி உள்ளது," என்றார் கனிமொழி.

குடியுரிமைச் சட்டத்தைப் பல கட்சிகள் எதிர்த்ததாக குறிப்பிட்ட அவர், மாநிலங்களவையில் இதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அதிமுக எதிர்த்து வாக்களிக்கவில்லை என்றார்.

"தமிழகத்தில் போராடக்கூடிய வர்களுக்கு எதிராக காவல்துறை செயல்படுகிறது. மக்கள் போராட்டத்துக்குப் பிறகும் குடியரசு திருத்தச் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெறவில்லை," என்றார் கனிமொழி.

இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில், இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொடுப்பதாக தமிழக ஆட்சியாளர்கள் கூறுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்திய, இலங்கை சட்டங்களை மாற்றி எப்படி இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொடுப்பார்கள் என்பது தமக்குத் தெரியவில்லை என்றார்.

"மக்களின் உணர்வுகளை அரசுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அனைவரும் இணைந்து போராட வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அவ்வாறு திரும்பப் பெற வைத்துவிட்டால், இந்தியாவை மீட்டெடுத்து விடுவோம் என்பது உறுதி," என்றார் கனிமொழி.