335 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு நேற்று மறைமுகத் தேர்தல்

335 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு நேற்று மறைமுகத் தேர்தல்

2 mins read
0ec48e0f-aa3d-44ce-a67e-5182ea0202dc
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஒத்தி வைக்கப்பட்ட 335 பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றது. கோப்புப்படம்: ஊடகம் -

சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஒத்தி வைக்கப்பட்ட 335 பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றது.

தமிழகத்தில் அண்மையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 27 மாவட்டங்களில் உள்ள 99,975 பதவிகளுக்குத் தேர்தல் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டது.

27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு கடந்த டிசம்பர் இறுதியில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.

இதன் பின்னர் 27 மாவட்டங்களில் உள்ள 27 மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர், 27 துணைத் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் உள்ளிட்ட 10,300 உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தலும் கடந்த 14ஆம் தேதி நடைபெற்றது.

அச்சமயம் போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வராதது, கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் உள்ளிட்ட காரணங்களால் 335 பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் மட்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து தகுந்த பாதுகாப்புடன் நேற்று அந்த 335 பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. எனினும் நேற்றும் சில இடங்களில் தேர்தலை நடத்த முடியாமல் போனதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தல் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக தேர்தல் மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.