விழுப்புரம்: புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாள்தோறும் மதுபானத்தை அதிக அளவில் கடத்தி வந்து விழுப்புரத்தில் விற்று வந்த பெண்கள் படை கடைசியில் போலிசிடம் சிக்கியது.
அந்தப் படையைச் சேர்ந்த இரண்டு பெண்களும் ஒரு பேருந்தில் விழுப்புரத்துக்கு வந்து கொண்டிருந்தபோது 340 மதுபான போத்தல்களுடன் போலிசிடம் சிக்கிக்கொண்டனர்.
விழுப்புர மாவட்டம் மொளச்சூரைச் சேர்ந்த வள்ளி என்பவரும் ஆயந்தூரை சேர்ந்த மேரி என்பவரும் புதுச்சேரியில் மொத்தமாக மதுபான போத்தல்களை வாங்கி அவற்றைப் பேருந்துகளில் எடுத்துவந்து விழுப்புரம் பகுதிகளில் விற்பனைச் செய்வது வழக்கம் என்றும் பல நாட்களாக பிடிபடாமல் இருந்து வந்த இவர்கள், கடைசியில் போலிசிடம் சிக்கிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்களைப் போன்ற பல பெண்கள் மது கடத்தலில் ஈடுபட்டு வருவதாகத் தெரியவந்துள்ளதால் போலிஸ் தீவிர சோதனைகளை முடுக்கிவிட்டு உள்ளது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

