சென்னை: சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் எனவும் ஒருவரை விடுதலை செய்தும் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
சென்னை அயனாவரம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி 2018ல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது.
போலிஸ் தீவிர விசாரணை நடத்தி அதே குடியிருப்பில் வசிக்கும் மின்தூக்கி ஊழியர் ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்ளிட்ட 17 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தது.
இவர்கள் ஒருவர் பின் ஒருவராக அந்தச் சிறுமியை கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை தங்களது இச்சைக்குப் பயன்படுத்தியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அயனாவரம் மகளிர் போலிஸ் வழக்குப்பதிவு செய்து 17 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தது.
இந்த வழக்கில் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகையை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் போலிஸ் தாக்கல் செய்தது.
வழக்கு நிலுவையில் இருந்தபோது அந்த 17 பேரில் ஒருவரான பாபு என்பவர் காசநோயால் இறந்து போனார். அவர் 12 ஆவதாக குற்றம் சாட்டப்பட்டவர்.
இதைத்தொடர்ந்து இதர 16 பேர் மீதான வழக்கு விசாரணை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இறுதியில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
12 வயதுக்குக் குறைவான சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குற்றவியல் திருத்தச் சட்டத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய பிரிவுகளின் கீழும் அந்த 15 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தோட்டக்காரரான குணசேகர் என்பவரை மட்டும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. தண்டனை விவரங்கள் இனிமேல்தான் தெரியவரும் என்று நேற்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

