கொரோனா: கதவை இழுத்து மூடும் தமிழகம்

கொரோனா: கதவை இழுத்து மூடும் தமிழகம்

2 mins read

சென்னை: உலகையே பயமுறுத்தி வரும் சீனாவின் வூஹான் கொரோனா கிருமி இந்தியாவின் கேரளா வரை பரவிவிட்ட நிலையில், அந்த கிருமி உள்ளே வராதபடி தமிழகம் தன் கதவுகளை இழுத்து மூடுகிறது.

கேரளாவுடன் கூடிய எல்லையில் 24 மணி நேரமும் பரிசோதனைகளைத் தமிழக அரசு தீவிரப் படுத்தி இருக்கிறது.

அதேவேளையில், முறையாகச் சமைக்கப்பட்ட அசைவ உணவு களை வழங்கும்படி ஹோட்டல்களும் விடுதிகளும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

சமையல் அறைகளைச் சுத்தமாக வைத்திருக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா கிருமி குறித்து தமிழகத்தில் அபாயச் சங்கும் ஊதும் அளவுக்கு நிலைமை இல்லை என்று உறுதிபட தெரிவித்துள்ள அரசாங்கம், இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநிலம் முழுவதும் எடுத்து வருகிறது.

மருத்துவமனைகள் 24 மணி நேரமும் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன. மக்களுக்கு அடிக்கடி ஆலோசனைகள் கூறப்பட்டு வருகின்றன.

மூன்று அடுக்கு முகக் கவசங்கள், N95 பாதுகாப்பு முகக் கவசங்கள், பாதுகாப்பு சாதனங்கள் அனைத்தும் போதிய அளவுக்கு இருப்பு இருப்பதாக அரசாங்கம் உறுதி கூறி உள்ளது.

இதனிடையே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆறு பேர் தனி வார்டுகளில் வைத்து கண்காணிக்கப்படுகிறார்கள்.

அந்த ஆறு பேரில் சீனாவில் இருந்து வந்த மூன்று பேரும் சிங்கப்பூரில் இருந்து வந்த 27 வயது நபர் ஒருவரும் அடங்குவார். மற்றவர்கள் சீனா சென்று வந்த தமிழ்நாட்டினர்.

சிங்கப்பூரில் இருந்து வந்தவர் உடலில் அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும் அவரும் கண்காணிக்கப்படுகிறார்.

இவ்வேளையில், சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய 799 பேருக்கு விமான நிலையங்களில் பரிசோதனை நடத்தப்பட்டது என்றும் அவர்கள் அனைவரும் அவரவர் வீட்டிலேயே மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டு உள்ளது.

இதனிடையே, சீனாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து ஆம்பூர் சென்ற மூன்று சீன நாட்டவரைக் காணவில்லை என்றும் அவர்கள் போலி முகவரி கொடுத்து இருக்கிறார்கள் என்றும் அதிகாரிகள் கூறினர்.