திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அழகுமலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று கோலாகலமாக நடந்தது. அதில் 800 காளைகளும் 600 காளையர்களும் பங்கேற்றனர்.
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்த அந்தப் போட்டியை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ரசித்தனர்.
முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட பின்னர் பதிவு செய்யப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாகக் களத்தில் விடப்பட்டன.
மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக காளையை அடக்க முயன்றனர்.
காயம் ஏற்படும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஐந்து பேர் கொண்ட 7 மருத்துவக் குழுக்கள், திருப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல மருத்துவ வண்டி வசதிகள் எல்லாம் தயாராக இருந்தன.
எடுத்த எடுப்பிலேயே 14 பேர் காயமடைந்துவிட்டனர். பலத்த காயமடைந்த தென்னவன் என்பவர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு இருசக்கர வாகனம், குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கீழத்தானியத்திலும் நேற்று ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடந்தது.
அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை உட்பட மூன்று காளைகளை அடக்க முடியாமல் வீரர்கள் போராடினர்.
இந்த ஜல்லிக்கட்டில் 650 காளை களும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். அதனை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.

