சிங்கப்பூரிலிருந்து புதுச்சேரி சென்றவருக்கு கொரோனா கிருமித்தொற்று சந்தேகம்; ஜிப்மரில் தீவிர சிகிச்சை

சிங்கப்பூரிலிருந்து புதுச்சேரி சென்றவருக்கு கொரோனா கிருமித்தொற்று சந்தேகம்; ஜிப்மரில் தீவிர சிகிச்சை

2 mins read
26938a5b-960d-436b-9e74-aef8ea0b0893
அவருடைய ரத்த மாதிரிகள் ஜிப்மர் மருத்துவமனையில் சோதிக்கப்படுவதுடன், புனேயில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. படம்: இணையம் -

சிங்கப்பூரில் இருந்து புதுச்சேரிக்குச் சென்ற 42 வயது ஆடவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால், அவர் நேற்று (பிப்ரவரி 3) முதல் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவருடைய ரத்த மாதிரிகள் ஜிப்மர் மருத்துவமனையில் சோதிக்கப்படுவதுடன், புனேயில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த அவர் பணி நிமித்தமாக சிங்கப்பூருக்கு வந்ததாகவும் அங்கு அவர், ஹாங்காங்கைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூன்று சீனர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஹாங்காங்கில் இருந்து வந்திருந்த பேராளருக்கு சளிக்காய்ச்சல் பிரச்சினை இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, இரண்டு நாட்களுக்கு முன்பு புதுச்சேரி திரும்பிய அவருக்கு, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

உடனடியாக அவர் கோரிமேடு பகுதியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கொரோனா கிருமித் தொற்று அறிகுறிகள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புனே ஆய்வகத்திலிருந்து பரிசோதனை முடிவுகள் வந்த பிறகுதான் அவருக்கு கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு உள்ளதா என்பது உறுதி செய்யப்படும்.

இந்தியாவில் கொரோனா கிருமித் தொற்று பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன.

புதுச்சேரியிலும் கொரோனா கிருமித்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. 8 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு கோரிமேடு அரசு தொற்று நோய் மருத்துவமனையிலும், ஜிப்மர் மருத்துவமனையிலும் தொடங்கப்பட்டுள்ளது.

அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் 5 படுக்கைகள் கொண்ட தனிப் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.

#jipmer#coronovirus#தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்