சென்னை: நடப்பு ஆண்டில் நடைபெறுவதாக இருந்த 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக 13.9.2019 அன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.
"அவற்றை ஜெயலலிதாவின் அரசு கவனத்துடன் பரிசீலித்து, இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும்''.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8ஆம் வகுப்புகளுக்கு, தமிழகத்தில் நடப்புக்கல்வி ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், முதல் மூன்றாண்டுகளுக்கு மட்டும் மாணவர்கள் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட மாட்டாது என்றும் அரசு கடந்த ஆகஸ்ட்டில் அறிவித்தது. இதற்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. இன்னும் 2 மாதமே உள்ளதால், இளம் குழந்தைகளை பொதுத்தேர்வுக்கு தயார்ப்படுத்துவது சிரமம் என்றும் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. இந்நிலையில் 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகக் கல்வி அமைச்சு ரத்து செய்துள்ளது.