தஞ்சாவூர்: 23 ஆண்டுகளுக்குப் பிறகு, தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் ஓதுவார்களால் தீந்தமிழ்த் தேவாரம் முழங்க, பிப்ரவரி 5ஆம் தேதி இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது.
தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி ஒரு பக்கம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் கோயிலையும் கோயில் சார்ந்த இடங்களையும் அழகுபடுத்தும் வேலைகள் பரபரப்பாக நடைபெற்றன.
கோயிலையொட்டிய சுவர்களில் கல்லூரி மாணவர்கள் பாரம்பரிய ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தியுள்ளனர். குறிப்பாக, பொன்னியின் செல்வன் நாவலைக் காட்சிப்படுத்தக்கூடிய ஓவியங்கள், 108 சிவ தாண்டவம், மாமன்னன் ராசராச சோழனின் கம்பீரத் தோற்றம், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், தலையாட்டிப் பொம்மை உட்பட 170க்கும் அதிகமான ஓவியங்களைக் கடந்த ஒரு மாதமாக இரவுபகலாகத் தீட்டினர்.
இந்த ஓவியங்கள் தஞ்சாவூர் மக்களையும் அங்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாகக் கவர்ந்துள்ளன.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, கி.பி.,1010இல் ராசராசனால் குடமுழுக்கு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு 1729, 1843 ஆகிய ஆண்டுகளில் தஞ்சை மராத்திய மன்னர்களால் குடமுழுக்கு செய்யப்பட்டது. பிறகு, 1997ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் குடமுழுக்கு செய்யப்பட்டது.

