யங்கூன்: குண்டுகள் வீசி தாக்கப்பட்டதில் மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தின் ரோஹிங்கியா கிராமத்தில் கர்ப்பிணி ஒருவர் உட்பட, இரண்டு பெண்கள் பலியாகினர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டெறி தாக்குதலுக்கு மியன்மார் ராணுவமே காரணம் என்ற உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் குற்றச்சாட்டை ராணுவம் நிராகரித்தது.
அதேசமயம் அதிக சுயாட்சிக்காக போராடி வரும் ஏஏ எனப்படும் 'அரக்கான் ராணுவம்' எனும் ரக்கைன் இன கிளர்ச்சிக் குழுதான் இதற்குக் காரணம் என்று மியன்மார் ராணுவ அறிக்கை தெரிவிக்கிறது.
வடக்கு ரக்கைன் மாநிலத்தில் உள்ள புத்திதாங் நகரத்திற்கான தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாவங் க்யாவ் ஜான், அருகிலுள்ள பட்டாளத்தில் இருந்து நள்ளிரவில் வந்த குண்டுகள் கின் டாங் கிராமத்தைத் தாக்கியதாகக் கூறினார்.
"எந்தவித சண்டையுமின்றி அவர்கள் எங்கள் கிராமத்தை நோக்கி பீரங்கியால் சுட்டனர்," என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் சொன்னார்.
இவ்வாண்டில் பொதுமக்கள் கொல்லப்படுவது இது 2வது முறை என்றும் அவர் தெரிவித்தார்.

