சென்னை: ஜெயலலிதா இருந்தவரை வாய்மூடி மவுனிகளாகவும் கொத்தடிமைகளாகவும் இருந்த அமைச்சர்கள், தற்போது வரம்பு மீறி அநாகரிகமாக, பல குரல்களில் பேசுகிற சுதந்திரத்தைப் பெற்றிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அநாகரிகமாகப் பேசும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
"திருச்சியில் பாஜக நிர்வாகி கொல்லப்பட்டதற்கு தனிப்பட்ட பகையே காரணம். மதமோ அரசியலோ காரணமல்ல என்பதை காவல்துறையினர் தெளிவுப்படுத்தி உள்ளனர். ஆனால் இந்த கொலைக்கு முஸ்லிம் பயங்கரவாதமே காரணம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது, அப்பட்டமான சட்ட விரோதப் பேச்சு.
"இது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், மதங்கள் இடையே வன்மத்தை வளர்த்து, கலவரத்தை உருவாக்குகிற வகையிலும் இருப்பதை, எவரும் மறுக்க முடியாது," என்று அழகிரி தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் பேச்சு, அரசியல் அமைப்புச் சட்டப்படி எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தில் ரத்தக்களறியை உருவாக்குவது தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நோக்கமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தான் நோக்கம் என்றால், அதை முறியடிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளுக்கு இருக்கிறது என கே.எஸ்.அழகிரி மேலும் தெரிவித்துள்ளார்.

