சென்னை: நிர்வாக வசதியை முன்னிட்டு கோவை மாநகர திமுக இரண்டாகப் பிரிக்கப்படுவதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இதனால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.
கோவை மாவட்ட திமுக இரண்டாகப் பிரிக்கப்படுவது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் திமுக 57 வார்டுகளுடன் செயல்படுவதே இதற்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து 14 வார்டுகளைக் கொண்ட கோவை மாநகர் கிழக்கு பொறுப்பாளராக நா.கார்த்திக் எம்எல்ஏவும், 29 வார்டுகளைக் கொண்டு புதிதாக பிரிக்கப்பட்ட கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக மு. முத்துசாமி நியமிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த சில மாதங்களாகவே திமுகவில் மாவட்டச் செயலர்கள் சிலர் மீது கட்சித் தலைமை அதிருப்தியில் இருப்பதாக தமிழக ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன.
இதையடுத்து சிலரை களையெடுக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.
மேலும், இளையரணித் தலைவர் உதயநிதியின் ஆதரவாளர்கள் மூன்று பேர் மாவட்டச் செயலர்களாக நியமிக்கப்பட இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது.
இதற்கான நடவடிக்கைகளின் முதல் நகர்வாக கோவை மாவட்ட திமுக இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் திமுக மூத்த பிரமுகர்கள்.
இதன் பின்னர் அடுத்தடுத்து மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும் என்றும் இதன் மூலம் புதியவர்களுக்கு கட்சிப் பதவிகள் கிடைக்கும் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

